மானாமதுரை அருகே 27 வயது நபர் கொலை செய்யப்பட்ட நிலையில், தலையை வெட்டி எடுத்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்திவேல் மகன் ராமு. 27 வயதான இவர் 2 நாட்களுக்கு முன்பு மாயமாகியுள்ளார். அக்கம்பக்கத்தில் எங்கு தேடியும் அவர் கிடைக்காத நிலையில், நேற்று காலை அருகில் உள்ள கண்மாய் கரையில் அடையாளம் தெரியாத இளைஞர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது கொலை செய்யப்பட்டு கிடந்தவர் தேடப்பட்டு வந்த ராமு என்பது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் டிஎஸ்பி கண்ணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர், ராமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவரது தலையை வெட்டி எடுத்து சென்றவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. கொலை செய்யப்பட்ட ராமு மீது எந்த வழக்கும் கிடையாது. உள்ளூரில் சிறு சிறு சண்டைகளில் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளார். இவ்வளவு கொடூரமாக கொலை செய்யும் அளவிற்கு பகை ஏதும் இருந்ததாக தெரியவில்லை. இதற்கிடையே, நீண்ட நேர தேடுதலுக்கு பின் ராமுவின் தலையை அருகில் உள்ள கண்மாயில் பாழடைந்த கிணற்றில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர். கொலை செய்யப்பட்ட ராமுவின் அத்தை மகளை அதே ஊரைச் சேர்ந்த பிரபாகரன் காதலித்து வந்துள்ளார். இதனை ராமு தட்டி கேட்டதுடன் கண்டித்துள்ளார். இதையடுத்து, சம்பவத்தன்று இரவு பிரபாகரன், அவரது நண்பர் பாலமுருகன் ஆகியோர் ராமுவிடம் சமாதானம் பேசலாம் என அழைத்துச் சென்று கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்நிலையில், மானாமதுரை போலீசார் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்தனர்.