டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை காதலன் அப்தப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன் அம்பலமானது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தின் பாணியில், பெண் ஒருவர் தனது லிவ் இன் பார்ட்னரால் பகீர் கொலை மிரட்டலுக்கு ஆளாகியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் துலே என்ற பகுதியில் வசித்து வரும் பெண், அங்குள்ள காவல்நிலையத்தில் அஷ்ரத் சலிம் மாலிக் என்பவர் மீது கடந்த நவம்பர் 29ஆம் தேதி புகார் அளித்துள்ளார். இந்த பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு நபருடன் திருமணம் ஆகி குழந்தை பிறந்துள்ளது. பெண்ணின் கணவர் மரணமடைந்த நிலையில், 2021ஆம் ஆண்டு ஹர்ஷல் மாலி என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் பிடித்து போக, லிவ் இன் முறையில் வாழலாம் என முடிவெடுத்துள்ளனர். இதற்காக பிரமாணப் பத்திரத்தை தயார் செய்யும்போதுதான், அந்த நபரின் உண்மையான பெயர் அஷ்ரத் சலிம் மாலிக் என்பது தெரியவந்துள்ளது.

இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்த நிலையில், அந்த பெண்ணும் அஷ்ரத்தும் ஓஸ்மானாபாத்தில் வீடு எடுத்து லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தனர். இந்த காலகட்டத்தில் அந்த பெண்ணையும், முதல் திருமணத்தில் பிறந்த பெண்ணின் குழந்தையையும் இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என்று அஷ்ரத் கட்டாயப்படுத்தியதாக அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அஷ்ரத் மூலம் அந்த பெண்ணுக்கு கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதன் பின்னரும் அந்த பெண்ணை மதம் மாறக்கூறி அஷ்ரத் மற்றும் அவரது தந்தை கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும், அந்த பெண்ணை சைலன்சர் வைத்து சுட்டு காயப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தாங்கள் கூறுவதை கேட்கவில்லை என்றால் டெல்லி ஷ்ரத்தா 35 துண்டுகளாக கொலை செய்யப்பட்டது போல, உண்ணை 70 துண்டுகளாக வெட்டி கொன்றுவிடுவேன் என அஷ்ரத் மிரட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து அஷ்ரத் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த நிலையில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரனையை தொடங்கியுள்ளது.