விண்வெளியில் கண்டறியப்பட்ட வினோத ரேடியோ வளையங்கள் என்று கூறப்படும் மர்ம ரேடியோ உமிழ்வு வளையங்கள் சூப்பர்நோவா வெடிப்புகள் அல்லது பெரும் கருந்துளையிலிருந்து வந்திருக்காலம் என்று புதிய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த வானியல் வல்லுநர்கள், ஆற்றல் வாய்ந்த நவீன தொலைநோக்கிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி மூலம் இதனை கண்டுபிடித்துள்ளனர். இந்த வினோத ரேடியோ வளையங்களில் இருந்து வரும் சிக்னல்கள் ரேடியோ தவிர வேற எந்த ஒரு கதிர்வீச்சுகளிலும் தென்படுவதில்லை. இவற்றில் சில வளையங்கள் 1 மில்லியன் ஒளியாண்டுகளுக்கும் மேலான தூரத்தில், நமது பால்வழியைவிட 10 மடங்கு பெரியதாக இருக்கலாம்.
இந்த சிக்னல்கள் இதுவரை அறியப்பட்ட எந்த வானியற்பியல் நிகழ்வுகளாலும் விளக்க முடியவில்லை என்பதால் இவை மர்ம வளையங்கள் என்று கருதப்படுகிறது. நைனிடாவில் உள்ள ஆர்யப்பட்டா ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி டாக்டர் அமிதேஷ் ஒமர், தனது ஆய்வில் இந்த வளையங்களில் சில, சூரியனை விட 1.4 மடங்கு கனமான பைனரி அமைப்பில் உள்ள ஒரு வெண் குறு நட்சத்திரத்தின் வெடிப்பால் ஏற்பட்ட வெப்ப அணு சூப்பர்நோவாக்களின் எச்சங்கள் என்பதை நிரூபித்துள்ளார்.