நாம் இறந்த பின் என்ன நடக்கும் அல்லது இறந்த பிறகும் ஒரு வாழ்க்கை உள்ளதா என்பது இன்று வரை மருத்துவர்களுக்கும் ஆன்மீகவாதிகளுக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்பதை கண்டறிய, என்.டி.இ.ஆர்.எஃப் (Near Death Experience Research Foundation) என்ற ஆராய்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த ஆராய்ச்சி அமைப்பு என்.டி.இ எனப்படும் மரணத்திற்கு நெருங்கிய அனுபவம் என்ற சோதனையை பல ஆண்டுகளாக செய்து வருகிறது. அதன்படி இறந்த பின்பும் வாழ்க்கை உள்ளது என்பதற்கு இந்த என்.டி.இ சான்றாக உள்ளது என ஆன்மீகவாதிகள் கருதுகின்றனர்.
ஆனால் உயிருக்கு ஆபத்தான சூழலில் இருக்கும் போது, உயிரை காப்பாற்றிக் கொள்ள மனித மூளை ஏற்றுக்கொண்ட தந்திரமே இந்த என்.டி, இ என்ற கூற்றை மருத்துவர்கள் முன் வைக்கின்றனர். இந்நிலையில் இந்த ஆராய்ச்சி அமைப்பின் இணையதளத்தில் பலர் தங்களது மரணத்திற்கு நெருங்கிய அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். கெனான் என்ற நபர் மரணத்தின் விளம்பில் இருந்த போது தனக்கு ஏற்பட்ட மிகவும் ஆச்சர்யமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
போதைப் பொருளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டதன் விளைவாக, சில நிமிடங்களுக்கு மருத்துவ ரீதியில் அவர் இறந்துவிட்டார். அந்த குறிப்பிட்ட நேரத்தில், தனது வாழ்க்கையில் இதுவரை ஏற்படாத அளவுக்கு மிகவும் அமைதியான மற்றும் ஆறுதலான நேரத்தை அனுபவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த தருணங்கள் இனிமையும், பரவசமும் நிறைந்தவை என்றும் கெனான் கூறியுள்ளார்.
என்.டி,இ,ஆர்.எஃப் இணையதளத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள கெனான் ‘ அப்போது என் சுயநினைவு என் உடலை விட்டு செல்வதை உணர்ந்தேன். அதுவரை பூமியில் நான் அனுபவித்ததை போல இல்லாமல், அதுவரை இல்லாத அளவுக்கு அமைதியான, ஆறுதலான நேரத்தை அனுபவித்தேன். நான் என் உடலில் இருந்து உயர்த்தப்பட்டேன்.

பின்னர் நிழல் வடிவிலான உருவங்கள் என்னை வரவேற்றன. அவர்கள் என் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்கள் என்று எனக்கு தெரியும். அந்த நேரத்தில் நான் பரவசத்தில் இருப்பதை உணர்ந்தேன். எந்த வார்த்தைகளும் அப்போது பேசப்படவில்லை. ஆனால் அந்த நேரத்தில் நான் இருந்த இடத்திலேயே இருக்க முடியும் அல்லது என் உடலுக்கு திரும்பி செல்ல முடியும் என்ற இரண்டு பாதை எனக்கு இருந்தது. நான் திரும்பி வர விரும்பினேன்..” என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோல் மரணத்திற்கு நெருங்கிய அனுபவத்தை சிட்னி என்ற பெண்ணும் பகிர்ந்துள்ளார். என்.டி.இ நேரத்தில் இறந்து போன தனது தாயை சந்தித்ததாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு தனக்கு பிரசவ நேரத்தில் ஏற்பட்ட சிக்கலால், மரணத்திற்கு அருகில் சென்றதாகவும், இறந்து போன தனது தாயை சந்தித்ததாக கூறியுள்ளார்.