2023-புத்தாண்டில் இருந்து கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிடப்போவதில்லை என இங்கிலாந்து அறிவித்துள்ளது.
சீனாவில் கடந்த 3 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு தொற்று பரவல் வேகமெடுத்தது. தற்போது பிஎப்.7 எனும் புதிய வகை கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் சீனாவில் தினமும் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது, எத்தனை பேர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர் என்பது குறித்த தகவல்களை அரசு வெளியிடுவதில்லை என பரவலாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் சீனாவில் இதுவரை தினசரி கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டு வந்த அந்நாட்டின் தேசிய சுகாதார மையம் இனி கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட மாட்டோம் என நேற்று முன் தினம் அறிவித்தது. இந்நிலையில் சீனாவை தொடர்ந்து இங்கிலாந்தும் தங்கள் நாட்டில் ஏற்படும் பாதிப்பு விவரங்களை வருகிற புத்தாண்டில் இருந்து வெளியிடப்போவதில்லை என அறிவித்துள்ளது.

சீனா, இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் அச்சம்!…
இதுகுறித்து இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவன தொற்றுநோய் தடுப்பு பிரிவு தலைவர் நிக் வாட்கின்ஸ் கூறுகையில், ‘தொற்றுநோய்களின் போது, ஆர் மதிப்பு மற்றும் வளர்ச்சி விகிதம் ஆகியவை பொது சுகாதார நடவடிக்கை மற்றும் அரசாங்க முடிவுகளை தெரிவிக்க பயனுள்ள மற்றும் எளிமையான குறிகாட்டியாக செயல்பட்டது. இப்போது, தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகள் நாம் கொரோனாவுடன் வாழும் கட்டத்திற்குச் செல்ல அனுமதித்துள்ளன. கண்காணிப்பும் குறைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தரவை வெளியிடுவது இனி தேவையில்லை’ என தெரிவித்துள்ளார். கொரோனா ஒவ்வொரு அலையின் போதும் உருமாற்றம் அடைந்து வருவதால், சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் இது போன்ற அறிவிப்பு அந்த நாடுகளில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.