மனைவியின் கோமாளித்தனத்தால் மன உளைச்சலுக்கு ஆளான கணவர், விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இளைஞர், கட்கோராவைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்த நிலையில், திருமணமாகி 7 நாட்களுக்குப் பிறகு 26 மே 2015 அன்று காலை, அவரது மனைவி படுக்கையில் மயங்கிக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது, அவர் மது அருந்தியதோடு அசைவம், குட்காவுக்கு அடிமையாகி இருப்பது தெரியவந்தது. இந்த விஷயம் பெண்ணின் மாமியாருக்கு தெரியவந்ததும், அவர்களும் பலவாறு திருத்த முயன்றனர். ஆனால், அந்த பெண் சிறிதும் ஒத்துழைக்கவில்லை.

மேலும், குட்கா சாப்பிட்டுவிட்டு படுக்கையறையில் எங்கு வேண்டுமானாலும் எச்சில் துப்பியதாகவும், அதனை தடுத்தால் கணவனிடம் தகராறு செய்துள்ளார். மேலும், அந்த பெண் 2015 டிசம்பர் 30 அன்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும், இரண்டு முறை மாடியில் இருந்து குதித்து இரண்டு முறை பூச்சி மருந்தை குடித்தார். இருப்பினும், ஒவ்வொரு முறையும் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். மனைவியின் இந்த கோமாளித்தனத்தால் மன உளைச்சலுக்கு ஆளான கணவர், விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், கணவரின் மனுவை நிராகரித்தது. இதனை எதிர்த்து கணவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு சத்தீஸ்கர் நீதிமன்றத்திற்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது, சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. ஆண்களைப் போல் பான் மசாலா, குட்கா, மது ஆகியவற்றுடன் அசைவம் சாப்பிட்டு கணவனை மனைவி துன்புறுத்தும் செயல் கொடுமையானது என நீதிபதிகள் கூறினர். நீதிபதி கவுதம் பாதுரி மற்றும் நீதிபதி ராதாகிஷன் அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு, குடும்பநல நீதிமன்றத்தின் உத்தரவை நிராகரித்து, கணவர் தாக்கல் செய்த விவாகரத்து மனுவை ஏற்றுக்கொண்டது.