சால்வை-பூங்கொத்து-மலர்மாலையை தவிர்த்து மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் அத்தியாவசிய பொருட்களை அன்புப் பரிசாக வழங்குமாறு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சமூகநீதி நோக்கத்தில் நாம் அடுத்த கட்டத்துக்குச் செல்ல, சில பழைய நடைமுறைகளைக் கைவிடலாம் என்பதே இதன் நோக்கம். நமது அன்பு பரிமாற்றத்தில் புத்தகங்கள் இடம்பெற்றதன் மூலம், நாம் அடுத்த கட்ட அறிவு இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறோம். அதேபோல இப்போது மற்றுமொரு மாற்றத்தை அன்பு இயக்கமாகத்ஸதொடங்கலாம் என நினைக்கிறேன். குறிப்பாக, தமிழகத்தில் மகளிர் மேம்பாட்டுக்கென அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் அளித்து, தொழிற்பயிற்சி அளித்து, அவர்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. அந்த இயக்கத்தில் நாமும் பங்குபெற முடியும்.
தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள், பல்வேறு பொருட்களை தயாரித்து வருகின்றனர். சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள், மெழுகுவர்த்தி, அழகுக் கைவினைப் பொருட்கள், வெள்ளிக் கொலுசுகள், தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மைகள், மரச் சிற்பங்கள் எனப் பலவற்றைத் தயாரித்து கண்காட்சிகளில் விற்பனைக்கு வைக்கின்றனர்.
அமைச்சரான பிறகு சமீபத்தில் நான் திண்டுக்கல், சிவகங்கை, கோவை, திருச்சி மாவட்டங்களின் நிகழ்ச்சிகளுக்குச் சென்றபோது, அப்படியான தரமான, கலைநயமிக்க பொருட்கள், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து வியந்துபோனேன். அவற்றின் தரமும் மிகச் சிறப்பாக இருந்தது. அவற்றுக்கான விற்பனை வாய்ப்புகள் அதிகரிப்பதன் மூலம், அந்தப் பெண்களின் பொருளாதாரம் மேம்படும் என்பதை நாம் அறிவோம்.
ஆகவே, என்னைச் சந்திக்க வரும் கழகத்தினர் இனிமேல் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் அத்தியாவசியப் பொருட்களை அன்புப் பரிசாக வழங்கலாம். இவற்றை ஆதரவற்ற குழந்தைகள். முதியோர் காப்பகங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். புத்தகங்கள், கழக வேட்டி-துண்டுகளை எப்போதும்போல் வழங்கலாம். ஆனால், பட்டு சால்வை, பூங்கொத்து போன்றவற்றை அறவே தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.