குரங்குகளுடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு பள்ளி ஆசிரியர் ஒருவர் 500 அடி பள்ளத்தில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் வராந்தா காட் என்ற மலைக்குன்று தொடர் உள்ளது. காடு, அருவி, குளங்கள் என இப்பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய சூழல் உள்ளன. எனவே, இங்கு பொழுதை ரம்யமாக கழிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில், அம்மாநிலத்தின் நஸ்ராப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஷேக் (39). இவர் பள்ளி ஆசிரியர். புத்தாண்டு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த அப்துல் ஷேக், விடுமுறை முடிந்ததும் ஜனவரி 3ஆம் தேதி தான் வேலைப் பார்க்கும் ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது இவர் வரன்தா காட் மலைத்தொடர் வழியாக சென்றுள்ளார். மலைத் தொடரை பார்த்ததும் ஆசையில் அங்கு இறங்கி அதை சுற்றிப் பார்த்து புகைப்படம் எடுக்கத் தொடங்கினார்.
அப்போது மலைக் குன்றில் சில குரங்குகள் அமர்ந்துள்ளதை பார்த்த அவர், அவற்றுடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். இந்த வேண்டாத ஆசை அவரின் உயிருக்கே உலை வைத்தது. சுமார் 500 அடி உயரத்தில் இருந்து குரங்குகளுடன் செல்பி எடுக்க முயற்சித்த போது நிலை தடுமாறி மலையில் இருந்து அப்துல் ஷேக் கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் பதறிப்போய் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். மீட்புப் படையினர் அங்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்களால் ஷேக்கின் சடலத்தைதான் மீட்க முடிந்தது. ஆபத்தான செல்ஃபி ஆசையில் பள்ளி ஆசிரியரின் உயிர் பறிபோன சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.