வீட்டை விட்டு 15 மைல் தூரத்தில் பணியாற்றுபவர்கள் மன மகிழ்ச்சியுடன் இருப்பதாக லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
நீண்ட தூரம், பணி நிமித்தமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பயணிப்பவர்கள் அதிகளவு அறிமுகமில்லாத வெளிமனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதனால், இவர்களது மனதில் நேர்மறையான எண்ணங்கள் பல உருவாகும் என்று ஆய்வின் தலைவர் டாக்டர் பவுலோ ஆன்சியாஸ் தெரிவித்துள்ளார். வடக்கு இங்கிலாந்தில் கொரோனா காலத்தில் பொதுப் போக்குவரத்துக்கு அதீத கட்டுப்பாடுகள் நிலவிவந்தன. இந்த ஆய்வின்மூலம் அன்றாடப் பயணத்தின் முக்கியத்துவம் பலருக்குத் தெரியவந்துள்ள நிலையில், போக்குவரத்து அதிகரிப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
எனவே மெட்ரோ ரயில், பேருந்து சேவைகளை அப்பகுதியில் அதிகரிக்க ஆய்வுக் குழுவினர் இங்கிலாந்து அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளனர். இந்த ஆய்வு முடிவை அடுத்து கிட்டத்தட்ட 3,000 பேருடன் ஆன்லைன் கருத்துக்கணிப்பு நடைபெற்றது. கொரோனா காலத்தில் வீட்டில் அடைபட்டிருந்த பலர் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின், வெளியே சென்று சுதந்திரமாக உலா வருவதாகக் கூறியுள்ளனர். குறிப்பாக 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அன்றாட போக்குவரத்து மனம் மற்றும் உடல் இரண்டுக்குமே நன்மை சேர்ப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.