டியூசன் படிக்க வந்த சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு பெற்ற தீயணைப்புத் துறை ஊழியரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த கிள்ளை பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, அங்குள்ள ஊராட்சி பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், இவர் செண்பகவள்ளி என்பவரிடம் டியூசன் படித்து வருகிறார். வழக்கம் போல டியூசனுக்கு சென்ற சிறுமி, சிறுநீர் கழிப்பதற்காக அந்த வீட்டின் பின்புறம் சென்றிருக்கிறார். அப்போது, செண்பகவள்ளியின் தந்தை தர்மலிங்கம் (வயது 65), சிறுமியை அருகில் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று தனது தாயாரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் தாயார், சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், போலீஸ் வருவதை அறிந்த தர்மலிங்கம் வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டார். 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துவிட்டு தலைமறைவாகியுள்ள ஓய்வு பெற்ற தீயணைப்புத் துறை ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.