திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்காக பிரதமர் மோடி போராடி வருகிறார். ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகம், தமிழ்நாடு இரண்டும் ஒன்றுதான். முக.ஸ்டாலின் அவர்கள் பலமுறை தமிழகம் என்று பேசியிருக்கிறார். ஆளுநர் தமிழகம் என்று குறிப்பிட்டது ஒன்றும் தவறில்லை. ஆளுநர் தமிழக கலாச்சாரத்தை முழுவதுமாக உணர்ந்தவர். ஆளுநர் உரையில் கூட அவர் தமிழில் தான் பேசியிருக்கிறார்.

ஆளுநர் அறிக்கையில் தமிழகம் அமைதி பூங்கா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது பொய் இப்போதுதான் கோவையில் குண்டு வெடித்துள்ளது. திமுக கொடுக்கக்கூடிய அறிக்கையை அப்படியே ஆளுநர் படிக்கக் கூடாது. தமிழக அரசுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், உண்மையான தகவல்தான் கொடுக்கிறோமா என்று பார்த்து ஆளுநரிடம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
மேலும், நடிகர் அஜித் அவர்களுடைய உழைப்பு அசாத்தியமானது. அதேபோல் நடிகர் விஜய் தமது நடிப்பை முதல் படத்தில் இருந்து தற்போதைய படம் வரை மிகச் சிறப்பாக மெருகேற்றி உள்ளார். வாரிசு அரசியலை நாங்கள் எதிர்க்கிறோம். ‘அரசியலில் துணிவாக இருப்பேன்’ ‘வாரிசு அரசியலை எதிர்க்கிறேன்’ நேரம் கிடைக்கும்போது வாரிசையும், துணிவையும் பார்ப்பேன். அஜித்தும் விஜய்யும் ஜென்டில்மேன் ஆக நடந்து கொள்கின்றனர். அந்த அளவுக்கு அவர்களுடைய ரசிகர்களும் ஜென்டில்மேனாக நடந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.