குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் இன்று சந்தித்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 9ஆம் தேதி உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தார். இதனால், ஆளுநருக்கு எதிராக, முதலமைச்சர் முக.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை முதலமைச்சர் வாசித்துக் கொண்டிருக்கும் போதே, ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். தமிழ்நாடு அரசின் உரையை முழுமையாக படிக்காதது, பேரவையில் தேசிய கீதம் இசைக்கும் முன்பாகவே ஆளுநர் வெளியேறியது உள்ளிட்ட விவகாரங்களை அவை விதிமீறல்களாக திமுக கையில் எடுத்துள்ளது.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரம் குறித்து ஜனாதிபதி திரௌபதி முர்முவை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையிலான திமுக எம்பிக்கள் குழு இன்று காலை சந்தித்து பேசியது. மேலும், முதலமைச்சர் முக.ஸ்டாலின் அளித்த மனுவை ஜனாதிபதியிடம் கொடுத்ததுடன் ஆளுநரின் அவை மீறல்கள் குறித்தும் விவாதித்தனர். இதுகுறித்து பரிசீலனை செய்து முடிவு எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்ததாக திமுக எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை பிற்பகல் டெல்லி செல்கிறார். தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரையின் போது என்ன நடந்தது என்பது குறித்து மத்திய அரசிடம் விளக்கமளிக்க அவர் டெல்லி செல்லலாம் என தெரிகிறது.