வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை எனில் பான் எண் செயலிழந்துவிடும் என்று வருமான வரித்துறை மீண்டும் எச்சரித்துள்ளது.
பான் அட்டை என்பது முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.. வங்கிக் கணக்குகளை தொடங்குதல், அவற்றில் பணத்தை டெபாசிட் செய்தல், டிமேட் கணக்குகளைத் தொடங்குதல் போன்ற பல்வேறு நிதி தொடர்பான பணிகளுக்கு பான் எண் (PAN) அவசியமாக உள்ளது.. இந்த சூழலில் பான் என்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை உத்தரவிட்டது..
இதற்கான காலக்கெடு வருமான வரித்துறையால் ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்டு, மார்ச் 31, 2022 வரை கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டது.. இந்த தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் எனவும் 2023 மார்ச் மாதத்திற்கு பிறகு அவர்களின் பான் எண் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டது..
எனினும் ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்கள், 2023, மார்ச் வரை பான் கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.. பெரும்பாலான பான் கார்டு பயனர்கள் ஏற்கனவே தங்கள் ஆதாரை பான் உடன் இணைத்துள்ளனர். ஆனால் பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்களின் பான் கார்டுகள் ஏப்ரல் 1ம் தேதி செயலிழந்துவிடும் என்று வருமான வரித்துறை மீண்டும் எச்சரித்துள்ளது.
வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில் “ வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, ஆதாருடன் பான் இணைக்கும் கடைசி தேதி 31.3.2023 ஆகும். இந்த தேதிக்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், பான் கார்டு செயலிழந்துவிடும்.. அவசர அறிவிப்பு. தாமதிக்க வேண்டாம், இன்றே இணைக்கவும்.” என்று தெரிவித்துள்ளது..
ஆதாருடன் பான் கார்டை எப்படி இணைப்பது..? உங்கள் பான் கார்டை இணைக்க, வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான incometax.gov.in என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும்.. பின்னர் Link Aadhaar விருப்பத்தை தேர்வு செய்து விவரங்கள் மற்றும் கேப்ட்சா குறியீடு ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.. இதன் மூலம் பான் கார்டை ஆதார் அட்டையுடன் எளிதாக இணைக்க முடியும்.. எனினும் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது..