ஒரு கொத்து திராட்சையின் விலை ரூ.9 லட்சம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆம் உண்மைதான்.. அதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஒரு பொருளை பேரம் பேசி குறைந்த விலைக்கு வாங்குவதில் இந்தியர்கள் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்களையே மலைத்துப் போக வைக்கும் அளவுக்கு ஒரு திராட்சையின் விலை இருந்திருக்கிறது. ஜப்பானின் ரூபி ரோமன் என்ற திராட்சையின் விலை சுமார் ரூ.9 லட்சமாம். இதனாலேயே உலகின் அதிக விலை கொண்ட திராட்சை என்ற உலக சாதனைப் பட்டியலிலும் இது இடம்பிடித்திருக்கிறது. ஜப்பானின் இந்த ரூபி ரோமன் திராட்சை சாதாரணமான திராட்சை பழத்தை காட்டிலும் 4 மடங்கு பெரிதாக இருக்கும். இந்த திராட்சைகளின் அறுவடை ஜூலையில் முடிந்து ஜப்பானின் விடுமுறை காலத்தில் ஒச்சுகென் என்ற முறையை கடைபிடித்து அதனை பரிசாக கொடுப்பது வாடிக்கையான ஒன்றாம்.
2020இல் ஒரு கொத்து ரூபி ரோமன் வகை திராட்சை பழங்கள் 12,000 அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் விலை போயிருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 9.76 லட்சம். ஒரே ஒரு ரூபி ரோமன் திராட்சை பழத்தின் விலையே 30,000 ரூபாய்க்கு ஹியோகோ மாகாணத்தின் அமகாசாகியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. இந்த வகை ரூபி ரோமன் கிரேப்ஸ் இஷிகிவா மாகாணத்திலேயே பயிரிடப்படுகிறது. அதனை சந்தைகளில் அதிக விலைக்கு விற்கிறார்கள். ஏனெனில் பாராட்டையும், உறவையும் வளர்ப்பதற்காக ஜப்பானியர்கள் இதுபோன்ற திராட்சைகளை பரிசாக கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். ஜப்பான் சூப்பர் மார்க்கெட்களில் பெரும்பாலும் பழங்களை விற்பனை செய்வதில்லை என்பதாலும் இந்த ரூபி ரோமன் கிரேப்ஸ் விலை அதிகளவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.