வீட்டின் மொட்டை மாடியில் இருந்து விசில் அடிப்பது என்பது பெண் மீதான பாலியல் தொந்தரவு என்று அர்த்தமில்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது..
மகாராஷ்டிர மாநிலம், அகமதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது அண்டை வீட்டுக்காரர்கள் மீது காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.. அந்த புகாரில் “ எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் யோகேஷ் என்ற நபர், தவறான நோக்கில் என்னை முறைத்து பார்க்கிறார்.. யோகேஷின் நடத்தையை நான் முதலில் கண்டுகொள்ளவில்லை.. ஆனால் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி யோகேஷ் தனது வீட்டிற்கு வெளியே இருந்து மொபைல் ஃபோனில் என்னை படம் எடுப்பதை பார்த்தேன்.. எனது கணவரும் அவர்கள் வீட்டின் வாசலுக்கு அருகே சென்று அதை பார்த்தார். இதை தொடர்ந்து எனது கணவர் யோகேஷ் மீது அவரது வீட்டு உரிமையாளரிடம் புகார் அளித்தார், ஆனால் வீட்டு உரிமையாளர் அதை பொருட்படுத்தவில்லை.
யோகேஷ் எனது வீடியோ கிளிப்களை அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் காட்டி என்னையும் எனது குடும்பத்தினரையும் அவதூறாகப் பேசி வந்தார்.. அப்போதும் நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் 2022-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி முதல் யோகேஷ் மொட்டை மாடியில் இருந்து விசில் அடிக்க ஆரம்பித்ததார்.. அவர் பல்வேறு சத்தங்களை எழுப்பியதுடன், தொடர்ந்து அவரின் வாகனத்தின் ஹாரனை அடித்துக் கொண்டிருந்தார்.
யோகேஷின் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் கூட அவரது செயல்பாடுகள் அனைத்தும் பதிவாகும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.. மார்ச் 24 அன்று, யோகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் என் மீது கற்களை வீசியதால், என் தலையில் காயம் ஏற்பட்டது.. இதுதொடர்பாக யோகேஷ் குடும்பத்தினரிடம் கேட்க சென்ற போது, அவர்கள் என்னை சாதிய ரீதியில் வசைபாடினர்.. மேலும் இதுகுறித்து புகார் அளித்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டினர்..” என்று குறிப்பிட்டுள்ளார்..
இதுதொடர்பான வழக்கை விசாரித்த அகமதுநகர் மாவட்ட நீதிமன்றம் யோகேஷ் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.. இதைத்தொடர்ந்து யோகேஷ் குடும்பத்தினர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது யோகேஷ் குடும்பத்தினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “ சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு யோகேஷ் குடும்பத்தினர் தான் முதலில் அந்த பெண் மீதும், அவரின் அவரது கணவர் மீதும் எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.. அதன்பின்னரே அந்த பெண் யோகேஷ் குடும்பத்தினர் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளார்..
சாதியை தவறாக பயன்படுத்தி அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.. இது பழிவாங்கும் செயலை தவிர வேறில்லை.. யோகேஷ் குடும்பம் வாடகைக்கு வசிக்கும் வீட்டை அப்பெண்ணும் அவரது கணவரும் வாங்க விரும்புகின்றனர்.. ஆனால் வீட்டு உரிமையாளர் அதை விரும்பவில்லை..” என்று தெரிவித்தார்..
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் “ ஒரு நபரின் வீட்டில் சில ஒலிகள் எழுப்பப்படுவதால், அவர் பெண்ணின் தவறான பாலியல் நோக்கத்துடன் இருப்பதாக நாம் நேரடியாக ஊகிக்க முடியாது. மேலும் அப்பெண் புகார் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.. அதே நேரம் யோகேஷ் குடும்பத்தினர் பதிவு செய்த புகாரை புறக்கணிக்க முடியாது. எப்.ஐ.ஆர் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை ஊகிக்க போதுமான ஆதாரம் இந்த நீதிமன்றத்தின் முன் உள்ளது” என்று கூறிய நீதிபதிகள் யோகேஷ் உள்ளிட்ட 3 பேருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்..