உத்தரப்பிரதேச மாநிலம் எட்டா பகுதியைச் சேர்ந்தவர் பவன் குமார். பிடெக் பட்டதாரியான இவர் டேராடூனில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டென் லிபெர்ட் என்ற பெண்ணுக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மலர்ந்தது. சுமார் 10 ஆண்டு கால காதலுக்குப் பின் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இதற்காக கடந்தாண்டு ஸ்வீடனில் இருந்து இந்தியா வந்த கிறிஸ்டன் லிபெர்ட், காதலன் பவன் குமாரை தாஜ்மஹாலில் வைத்து சந்தித்துள்ளார். அங்கு தான் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தனர்.
இதற்கிடையே, பவன் குமார் தனது வீட்டில் திருமணம் குறித்து பேசுகையில், வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. குழந்தைகளின் சந்தோஷமே எங்கள் சந்தோஷம் என பவனின் தந்தை கீதம் சிங் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்திய முறைப்படி திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஸ்வீடன் பெண் கிறிஸ்டன் புடவை அணிந்து இந்திய முறைப்படி அனைத்து திருமண சடங்குகளையும் செய்தார். ஜனவரி 27ஆம் தேதி அன்று இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் தம்பதியை வாழ்த்தி மகிழ்ந்தனர். இந்தியாவுக்கு எப்போது வந்தாலும் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய கிறிஸ்டன் லிபெர்ட், இந்த திருமணம் வாழ்நாளில் மகிழ்ச்சியான தருணம் என்று தெரிவித்துள்ளார்.