‘தளபதி 67’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், இன்று அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது.
‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு மீண்டும் லோகேஷ் – விஜய் கூட்டணி அமையுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இதுகுறித்த கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் உறுதி செய்து தகவல் வெளியிட்டார். எனினும், விஜய் உடனான படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகமலேயே ‘வாரிசு’ படம் முடிந்ததும், ரகசியமாக பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. இந்நிலையில், நேற்று மாலை அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அதன்படி, விஜய் – லோகேஷ் கனகராஜ் இணையும் படத்திற்கு ‘தளபதி 67’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில், இந்தப் படத்தை லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்வதாகவும், லோகேஷ் உடன் இயக்குநர்கள் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி வசனம் எழுதுவதாகவும் குறிப்பிடப்பட்டது. மேலும், கடந்த 2ஆம் தேதி படப்பிடிப்பு துவங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் இன்று காலை 8.30 மணிக்கு தனிவிமானத்தில் காஷ்மீர் புறப்பட்டுச் சென்றுள்ளனர். படத்தின் நிர்வாக தயாரிப்பாளரான ராம்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் விமான டிக்கெட் புகைப்படத்தை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், ஏற்கனவே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹிண்ட் கொடுத்திருப்பதால், ‘தளபதி 67’ புரோமோ டீசர் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.