காதலை ஏற்க மறுத்ததால், ரூ.24 கோடி நஷ்ட ஈடு கேட்டு நீண்ட நாள் தோழி மீது காதலன் வழக்கு தொடர்ந்த சம்பவம் சிங்கப்பூரில் நிகழ்ந்துள்ளது.
சிங்கப்பூரை சேர்ந்தவர் காவ்ஷிகன். இவரும் நோரா டான் என்ற பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக நண்பர்களாக பழகிவந்துள்ளனர். இந்தநிலையில் நாளடைவில் நோரா மீது காவ்ஷிகனுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு தன்னுடைய காதலை காவ்ஷிகன் வெளிப்படுத்தியிருக்கிறார். நட்பாக மட்டும் பழகியதாகவும் அதனால் காதலை ஏற்க நோரா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது. இருப்பினும் நோரா மீது உள்ள காதலை மறக்க முடியாமல் தவித்து வந்த காவ்ஷிகன், தனது விருப்பத்துக்கு இணங்க வேண்டும் அல்லது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் மாற்ற முடியாத சேதாரத்தை சந்திக்க நேரிடும் என்று நோராவை மிரட்டிவந்துள்ளார். இதனால் மன உளச்சலில் இருந்த இருவரும் ஓராண்டாக மருத்துவர்களை சந்தித்து ஆலோசனைகளை பெற்றுவந்துள்ளனர்.ஆனால் காவ்ஷிகனிடம் எந்த மாற்றமும் நிகழவில்லை. இதனால் அவரிடம் இருந்து நோரா தள்ளியிருக்க தொடங்கியிருக்கிறார். நோராவின் இந்த செயலால் மிகுந்த மன உளச்சலில் இருந்த காவ்ஷிகன், மன அழுத்தம் மற்றும் தொழில் வாழ்க்கையை சிதைத்ததாக கூறி ரூ.24 கோடி நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை வருகிற பிப்ரவரி 9ம் தேதி நடத்தப்படும் என்றும் நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.