ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தொழிலதிபர்களை மயக்கி, திருமணம் செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே குன்னத்தூர் தோட்டத்துப்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி (48). இவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. இவருக்கு நீண்டகாலமாக திருமணமாகாமல் இருந்து வந்த நிலையில், புரோக்கர் மூலம் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திண்டுக்கல்லை சேர்ந்த தேவி (35) என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே 2 திருமணங்களை செய்த தேவி மூன்றாவதாக சுப்பிரமணியை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், சுப்பிரமணியின் தாய்க்கும், தேவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, மருமகள் தேவியின் தொல்லை தாங்க முடியாமல், கணவர் சுப்பிரமணியின் தாய், அவரது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, ”உங்கள் தாயார், சகோதரியிடம் கையெழுத்து வாங்கி 2 ஏக்கர் நிலத்தை விற்று விடுங்கள். நாம் திண்டுக்கல்லுக்கு சென்று குடும்பம் நடத்துவோம்” என சுப்பிரமணியிடம் தேவி வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு சுப்பிரமணி சம்மதிக்கவில்லை. கடந்த 15ஆம் தேதி சுப்பிரமணிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அப்போது அவருக்கு தேவி ஊசி மூலம் மருந்து செலுத்தியுள்ளார். எதற்காக ஊசி போடுகிறாய்? என்று கேட்டபோது, காய்ச்சல் குணமாவதற்கு என்று தேவி கூறியுள்ளார். அந்த ஊசி போட்ட சிறிது நேரத்திலேயே சுப்பிரமணி மயக்கமடைந்தார். பின்னர் அவரை உறவினர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சுய நினைவை இழந்தார். இதையடுத்து, திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சுய நினைவு திரும்பியது நிலையில், மருத்துவமனையில் இருந்து தேவி திடீரென மாயமானார். இதனால் அவர் மீது உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
சுப்பிரமணியின் நிலத்தை அபகரிக்க அவரை விஷ ஊசி போட்டு கொல்ல முயன்றதாக குன்னத்தூர் போலீசில் உறவினர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, தேவியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் 27ஆம் தேதி நாமக்கல் தொழிலதிபர் ரவி என்பவரை தேவி 4-வது திருமணம் செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, நாமக்கல் பகுதியில் தங்கியிருந்த தேவியிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான் தேவி ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை மயக்கி திருமணம் செய்து ஏமாற்றும் பெண் என்பது தெரியவந்தது. திண்டுக்கல்லை சேர்ந்த தேவி தொழிலதிபர்கள், வசதியுடைய ஆண்களை ஆசைகாட்டி மயக்கி திருமணம் செய்து சில நாட்கள் குடும்பம் நடத்துவார் என்பதும் அவர்களிடம் இருந்து பணம், சொத்துக்களை பறித்து கொண்டு தலைமறைவாகி, அடுத்ததாக வேறு ஒருவருக்கு வலை விரித்து வீழ்த்தி திருமண வாழ்க்கையை தொடர்வதும் அம்பலமானது.
சுப்பிரமணியுடன் தேவி வாழ்ந்து வந்தபோது, மனைவியை விவாகரத்து செய்த நாமக்கல் தொழிலதிபர் ரவி திருமணத்துக்கு பெண் பார்த்து வருவதை தேவி அறிந்துள்ளார். சுப்பிரமணியைவிட அவரிடம் அதிக பணம், சொத்து இருப்பதை அறிந்து அவருக்கு வலை விரித்துள்ளார். அவரை திருமணம் செய்ய சுப்பிரமணி தடையாக இருப்பார் என நினைத்துதான் அவரை விஷ ஊசி போட்டு கொல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தேவியை குன்னத்தூர் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 6 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.