இரட்டை இலை சின்னம் எடப்பாடி தரப்புக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான சின்னத்திற்கான படிவத்தில் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட அதிகாரம் வழங்கியது தேர்தல் ஆணையம். குறுகிய காலத்திற்கு அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அங்கீகாரம் அளிப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது, தமிழ் மகன் உசேனை அங்கீகரித்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலர் சிவகுமாருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. அதிமுக வேட்பாளருக்கான ஏ. பி. படிவங்களில் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. இதனால், தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதி ஆகிவிட்டது.
இந்நிலையில், இரட்டை இலையை எடப்பாடி தரப்பு கைப்பற்றியதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் அரசியல் வாழ்க்கையில் புயல் அடிக்க ஆரம்பித்துள்ளது. அரசியல் ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ள ஓபிஎஸ், அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்டாயம் அவர் அரசியலில் தொடருவார். ஆனால், அதிமுகவில் அவருக்கான இடம் முடிந்து விட்டதால், தனது தொண்டர்களுடன் புதிய கட்சி தொடங்கி, தென்மாவட்ட அரசியலை கையில் எடுப்பார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.