உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14-ம் தேதியை ‘பசு அணைப்பு தினமாக’ கொண்டாடுமாறு பசுப் பிரியர்களுக்கு இந்திய விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிப்ரவரி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது வேலண்டைன்ஸ் டே எனப்படும் காதலர் தினம் தான். முதலில் மேற்கத்திய நாடுகளில் மட்டுமே கொண்டாடப்பட்ட காதலர் தினம், தற்போது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் தான் காதலர் தினம் என்று ஒரு நாள் மட்டுமில்லாமல் ஒரு வாரம் முழுவதும் காதலர் வாரமாக கொண்டாடப்படுகிறது. ரோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, முத்த தினம் என பிப்ரவரி 7 முதலே இளைஞர்கள் காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்..

இந்நிலையில் பிப்ரவரி 14-ம் தேதியை ‘பசு அணைப்பு தினமாக’ கொண்டாடுமாறு பசுப் பிரியர்களுக்கு இந்திய விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் அந்த வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ காலப்போக்கில் மேற்கத்திய கலாச்சாரத்தின் முன்னேற்றம் காரணமாக வேத மரபுகள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் உள்ளன..
பசுவின் மகத்தான பலனைக் கருத்தில் கொண்டு, பசுவைக் கட்டிப்பிடிப்பது உணர்ச்சி வளத்தைத் தரும்.. இதனால் நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு மகிழ்ச்சியை அதிகரிக்கும். எனவே, கோமாதாவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும் மாற்றும் வகையில், அனைத்து பசுப் பிரியர்களும் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அணைப்பு தினமாகக் (Cow Hug day) கொண்டாடலாம்.

இந்திய கலாச்சாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக பசு திகழ்கிறது.. மேலும் கால்நடை மற்றும் பல்லுயிர் வளத்தை பசு பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மனித குலத்திற்கு எல்லாச் செல்வங்களையும் அளிக்கும் அன்னையை போன்று பசு இருப்பதால் தான், அது “காமதேனு” என்றும் “கோமாதா” என்றும் அழைக்கப்படுகிறது..” என்று தெரிவித்துள்ளது
மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் வழிகாட்டுதலின் பேரில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக விலங்குகள் நலவாரியம் தெரிவித்துள்ளது.