காதலனுக்கு செல்போன் வாங்கி தர வேண்டும் என்பதற்காக மூதாட்டியை அடித்து கொடூரமாக தாக்கி நகைகளை பறித்துக் கொண்டு தப்பியோடிய பள்ளி மாணவியை காவல்துறையினர் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பூவாற்றுப்புழா பகுதியைச் சேர்ந்தவர் ஜலஜா. 60 வயது மூதாட்டியான இவர், வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 17 வயது சிறுமி ஒருவர், மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்து அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றி தரும்படி கேட்டுள்ளார். அதற்கு மூதாட்டி மறுத்ததால், ஆத்திரமடைந்த சிறுமி, அருகில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து மூதாட்டியின் முகத்தில் தூவிவிட்டு அவரை கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர், ரத்த வெள்ளத்தில் மூதாட்டி சரிந்து விழுந்த நிலையில், அவரிடம் இருந்த செயின், மோதிரத்தை திருடிக் கொண்டு அந்த சிறுமி தப்பியோடிவிட்டார்.
பின்னர், ரத்தம் சொட்ட சொட்ட வீட்டிற்கு வெளியே வந்து அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மூதாட்டியை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த சிறுமி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார் என்றும், தனது காதலனுக்கு செல்போன் வாங்கித் தருவதற்காக இந்த சம்பவத்தை அரங்கேற்றியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, சிறுமியை கைது செய்த காவல்துறை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறார் சிறையில் அடைத்தனர்.