ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் நந்தியாவட்டை செடியின் இலை, மலர். வேர்பட்டையில் உள்ள மருத்துவ பயன்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நந்தியாவட்டை பூக்கள் மற்றும் இலையிலிருந்து வரும் பால் இரண்டுமே மருத்துவ பயன் நிறைந்தவை.இதனுடைய வேர் கசப்பு மற்றும் துவர்ப்புச்சுவையும் கொண்டிருக்கும். உடலில் இருக்கும் சூட்டை கிளப்பி பிறகு சீராக்கும். ஆயுர்வேத மருத்துவத்தில் நந்தியாவட்டை பயன்படுத்தப்படுகிறது.
அமினோ அமிலங்கள், கரிம அமிலங்கள் போன்ற வேதிபொருள்களும் சிட்ரிக், ஒலியிக் அமிலங்களும் உள்ள இந்த நந்தியாவட்டை கண் நோய்களுக்கு சிறந்த தீர்வான இதை கண் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. கண் சிவப்பு இருப்பவர்கள் நந்தியாவட்டை பூ இதழ்களின் சாறு எடுத்து தாய்ப்பால் இரண்டு சொட்டு கலந்து கண்களில் விட்டால் கண் சிவப்பு குணமாகும்.
நந்தியாவட்டையின் பூக்களை சுத்தம் செய்து சாறு பிழிந்து இரண்டு துளி கண்களில் விடலாம். கண் படலம், மண்டைக்குத்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். கண்கள் குளிர்ச்சியடையும். கண் நோய் வராது. கண் பார்வை கூர்மை பெறும். கண்களில் பூ விழுவதை ஆரம்பத்தில் கண்டறிந்தால் நந்தியாவட்டை பூவுடன், களாப்பூ சேர்த்து நல்லெண்ணெயில் ஊறவைத்து வடிகட்டி அதை பதப்படுத்தி கண்களில் விட்டால் கண்களில் பூ மறையும். சதை வளர்வது கட்டுப்படும்.
வயிற்றில் பூச்சித்தொல்லை அதிகமாக இருந்தால் இரவு தூங்கும் முன்பு நந்தியாவட்டை வேர் சிறு துண்டு எடுத்து, உரலில் இடித்து ஒரு டம்ளர் நீர் விட்டு சேர்த்து கொதிக்க வைத்து அதை பாதியாக வரும் வரை காய்ச்சி குடித்துவந்தால் வயிற்று புழுக்கள் வெளியேறும். அதுமட்டும் அல்லாமல் குடலில் இருக்கும் அழுக்கையும் வெளியேற்றும். நந்தியாவட்டை வேரை காய்ச்சி குடித்தால் கல்லீரல், மண்ணீரல், சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை போன்ற குறைபாடுகளை நீக்கும்.
வெட்டுகாயங்கள் இருக்கும் இடங்களில் காயங்கள் ஆறாமல் இருந்தால் நந்தாவட்டை இலையில் இருந்து வடியும் பால், புண் இருக்கும் இடத்தில் தடவினால் சீழ் பிடித்தல் நின்று காயங்களும் குணமாகும். பல் வலி இருக்கும் போது வேரை வாயில் போட்டு சாறு பல்லில் இறங்கும்படி நன்றாக மென்று துப்ப வேண்டும். பல்லுக்குள் இந்த சாறு இறங்கினாலே பல் வலி குணமாகிவிடும். பல் சொத்தை, ஈறுகளில் வலி ,பல் கூச்சம் போன்ற உபாதை இருப்பவர்கள் வேர் ஊறவைத்த நீரில் வாயை கொப்புளித்துவந்தால் வாய்ப்புண் பல் பிரச்சனைகள் குறையும்.