ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் தான் இறுதிப்போட்டியில் மோதும். டெஸ்ட் போட்டிகளில் பெறும் வெற்றிகளை பொறுத்து வெற்றி விகிதங்களின் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் அணிகள் வரிசைப்படுத்தப்படுகின்றன. இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி 75.56 சதவிகிதத்துடன் முதலிடத்திலும், 58.93 சதவிகிதத்துடன் இந்திய அணி இரண்டாம் இடத்திலும் இருந்தன. அதேபோல் இலங்கை அணி மூன்றாம் இடத்திலும், தென்னாப்பிரிக்கா நான்காம் இடத்திலும் உள்ளன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பெற்ற வெற்றிக்கு பின் 61.67 சதவிகிதமாக இந்திய அணியின் வெற்றி விகிதம் உயர்ந்த அதேவேளையில், ஆஸ்திரேலிய அணியின் விகிதம் 75.56-இல் இருந்து 70.83ஆக குறைந்தது. இந்நிலையில், டெல்லியில் நடந்த 2-வது டெஸ்ட்டிலும் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அணியின் வெற்றி விகிதம் 61.67லிருந்து 64.06 ஆக உயர்ந்தது. இந்திய அணி 2ஆம் இடத்தில் நீடித்தாலும், அந்த இடத்தை வலுவாக பிடித்ததுடன், முதலிடத்தை நோக்கி நகர்கிறது. ஆஸ்திரேலிய அணியின் விகிதம் 70.83லிருந்து 66.67 சதவிகிதமாக குறைந்தது. ஆஸ்திரேலிய அணியை 3வது டெஸ்ட்டில் வீழ்த்தினால் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறிவிடும். ஆஸ்திரேலிய அணி 2ஆம் இடத்திற்கு பின் தங்கிவிடும்.