புதுச்சேரி மாநிலம் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படுகை அணை ஆற்றில் இளம்பெண் ஒருவர் திடீரென 60 அடி உயர பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆற்றில் சீரான அளவில் தண்ணீர் இருந்ததால் அவரது உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தியதில், தற்கொலைக்கு முயன்றவர் 12ஆம் வகுப்பு மாணவி என்பது தெரியவந்தது. அந்த மாணவியை சிவராத்திரியன்று இரவு முழுவதும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் அவர்களுக்கு தெரிந்த பகுதி முழுவதும் மாணவியை தேடியுள்ளனர்.
இந்நிலையில், தனியார் பேருந்து நிறுவனம் ஒன்றில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றும் பாபு என்பவர் ஆசைவார்த்தை கூறி அந்த மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி தெரிவித்துள்ளார். இதனை வீட்டில் சொல்ல பயந்து இயல்பாக வீட்டிற்கு வந்துள்ளார். மாணவியை காணாமல் தேடிய விரக்தியில் அவரது பெற்றோர் மாணவியை கண்டித்துள்ளனர். இதனால், மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பாபுவை கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.