நீங்கள் என் தலையை வெட்டலாம் ஆனால் அகவிலைப்படியை இதற்கு மேல் உயர்த்த முடியாது என்று அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிராகரித்தார் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்கத்தில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி அம்மாநில நிதியமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா 2023-24ஆம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, ஆசிரியர்கள் உள்பட தற்போதைய மற்றும் ஓய்வுபெற்ற மாநில அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக 3 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் என அறிவித்தார். இதுவரை அரசு அடிப்படை சம்பளத்தில் 3 சதவீதத்தை அகவிலைப்படியாக வழங்கி வருகிறது. இருப்பினும் மத்திய அரசு ஊழியர்கள் பெறும் அகவிலைப்படியுடன் ஒப்பிடும்போது, இந்த உயர்வு மிகக் குறைவு என கருதும் அம்மாநில அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத உயர்வு திருப்தி அளிக்கவில்லை. இதையடுத்து, மத்திய அரசுடன் இணையான அகவிலைப்படியை வழங்கக் கோரி பல்வேறு மாநில அரசு ஊழியர்களின் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கு அம்மாநில பாஜக ஆதரவு அளித்துள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்க பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் மீது முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், ”நீங்கள் என் தலையை வெட்டலாம் ஆனால் அகவிலைப்படியை அதிகரிக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும், எங்கள் அரசாங்கத்தால் இனி கூடுதலாக அகவிலைப்படி வழங்குவது சாத்தியமில்லை. எங்களிடம் பணம் இல்லை. கூடுதலாக அகவிலைப்படி கொடுத்துள்ளோம். நீங்கள் மகழ்ச்சியடையவில்லை என்றால் என் தலையை நீங்கள் வெட்டலாம். இன்னும் எவ்வளவு வேண்டும்?.
மத்திய மாநில அரசுகளின் ஊதிய விகிதிங்கள் வேறு வேறு. இன்று மேற்கு வங்கத்தில் முழு ஓய்வூதியம் தருகிறோம், அதை நிறுத்தினால் ரூ.20 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்தி கடன் சுமையை குறைக்கலாம். ஊழியர்களுக்கு ரூ.1.79 லட்சம் கோடி அகவிலைப்படி அரசு செலுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பாங்காக், இலங்கை மற்றும் பிற இடங்களுக்கு செல்ல அனுமதிக்கிறோம். நமக்கு ஊதியத்துடன் 40 நாட்கள் விடுமுறை உள்ளது. வேறு எந்த அரசும் சம்பளத்துடன் இவ்வளவு விடுமுறைகளை அனுமதிக்குமா?” என கேள்வி எழுப்பினார்.