திண்டுக்கல் மாவட்டம் பழனி அண்ணா நகரை சேர்ந்தவர் நகைக்கடை அதிபர் சதீஷ் ஆனந்த். இவருக்கு சொந்தமான இடம் ஒன்று, வள்ளுவர் திரையரங்கிற்கு பின்புறம் உள்ளது. ஓராண்டுக்கு முன்பு அந்த இடத்தில் கட்டிடம் கட்டி கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில், சதீஷ் ஆனந்த் கட்டியுள்ள கடையில் வாசலை மறித்து, திரையரங்க ஊழியர்கள் கொட்டகை அமைக்க குழி தோண்டியபோது, சதீஷ் ஆனந்த் தடுத்து நிறுத்தியுள்ளார். ஆனால், அங்கு கொட்டகை அமைக்க முயன்றவர்களோ அந்த இடம் வள்ளுவர் திரையரங்க உரிமையாளருக்கு சொந்தமானது வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, சதீஷ் ஆனந்திடம் வாக்குவாதம் செய்த ஆசாமி ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷ் ஆனந்தை விரட்டி விரட்டி குத்த ஆரம்பித்தார். விரட்டியபோது கையில் இருந்து தவறி விழுந்த கத்தியை எடுத்து மீண்டும் குத்தினார். மனிதம் மறந்து, அங்குள்ள எவரும் தடுக்காமல் சிலை போல நின்ற நிலையில், எதிர்த்த கடையில் உள்ள வளர்ப்பு நாய் ஒன்று கத்திக்குத்து ஆசாமியை விரட்டிச் சென்றது. அதற்குள்ளாக கடையில் இருந்து வெளியே வந்த நாயின் உரிமையாளர்களான இரு பெண்கள், கையை தட்டி சத்தம் போட்டதால், அந்த நாயும் கொடூரனை விரட்டாமல் திரும்பிச்சென்று விட்டது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சதீஷ் ஆனந்தை மீட்டு, பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கத்திக்குத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தப்பி ஓடிய நபர் வள்ளுவர் திரையரங்கு ஊழியர் ரங்கசாமி என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, கத்தியுடன் ரங்கசாமியை கைது செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக வள்ளுவர் திரையரங்க ஊழியர்கள் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சதீஷ் ஆனந்த், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.