படுக்கையில் அதிக நேரத்தை செலவிடுபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி. ஆம், நமது போர்வை அல்லது படுக்கை விரிப்புகளில் மில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள், கிருமிகள் மற்றும் பூஞ்சைகள் வளர்கிறது என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும், நமது படுக்கை விரிப்புகள் மற்றும் படுக்கை தலையணைகளை விட நமது வீட்டின் கழிப்பறைகள் தூய்மையானவை என்றும் கிருமிகள் இல்லாதவை என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஜேசன் டெட்ரோ என்ற நுண்ணுயிரியல் நிபுணரின் கூற்றுப்படி, மில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள் நமது படுக்கை விரிப்புகளில் வளர்கின்றன என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஒரு ஆய்வில் 4 வாரங்கள் பயன்படுத்திய படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகளின் மாதிரிகள் நுண்ணோக்கியின் கீழ் வைத்து ஆய்வு செய்யப்பட்டது. ஒரு மாதம் பயன்படுத்திய படுக்கை விரிப்பில் 10 மில்லியனுக்கும் அதிகமான பாக்டீரியாக்கள் இருக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த பாக்டீரியாக்களின் எண்ணிக்கை உங்கள் டூத் பிரஷ் ஸ்டாண்டில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை விட 6 மடங்கு அதிகம். அதேபோல, 3 வாரம் பயன்படுத்திய படுக்கை விரிப்பில் 90 லட்சம் பாக்டீரியாவும், 2 வாரம் பயன்படுத்தப்பட்ட படுக்கை விரிப்பில் 50 லட்சம் பாக்டீரியாவும், 1 வாரம் பயன்படுத்தப்பட்ட படுக்கை விரிப்பில் 45 லட்சம் பாக்டீரியாவும் இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
நமது படுக்கை விரிப்பை விட தலையணைகள் அசுத்தமாக இருக்கின்றன. பெரும்பாலும் தலையணையில் நமது முகத்தில் இருந்து வரும் வியர்வை மற்றும் இறந்த சரும செல்கள் அதில் ஒட்டிக்கொள்ளும். இதனால் 4 வாரம் பயன்படுத்தப்பட்ட தலையணை உறையில் 12 மில்லியன் பாக்டீரியாக்கள் உள்ளன. அதேபோல், 1 வாரம் பயன்படுத்திய தலையணை உறையில் சுமார் 5 மில்லியன் பாக்டீரியாக்கள் உள்ளன.
வியர்வை மற்றும் உமிழ்நீர் போன்ற உடல் திரவங்கள் நேரடியாக நமது படுக்கை விரிப்பில் சேரும். இந்த திரவங்கள் படுக்கை விரிப்புகளின் இழைகளில் சிக்கி, படிப்படியாக பாக்டீரியாக்கள் அவற்றில் வளர ஆரம்பிக்கின்றன என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகளை மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.