அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விழப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயபாண்டியன் (30). இவரது மனைவி சத்யா (26). இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இந்நிலையில், கணவர் விஜயபாண்டியன் மற்றும் மாமியார் மனோரஞ்சிதம் ஆகியோர் சத்யாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். இதுபற்றி கடந்த 10ஆம் தேதி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சத்யா புகார் அளித்துள்ளார். இதையடுத்து, கணவர், மாமியாரை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த விஜயபாண்டியன் மற்றும் அவரது தாயார் மனோரஞ்சிதத்துடன் சேர்ந்து மனைவி சத்யாவை 3 நாட்களாக தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார். இதுதொடர்பாக சத்யா மீண்டும் புகார் கொடுத்தார். அதில், கணவரும், மாமியாரும் 3 நாட்களாக தனி அறையில் அடைத்து சித்ரவதை செய்ததாகவும், சாப்பாட்டிற்கு பதிலாக சாணத்தை சாப்பிட சொல்லி கொடுமைப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும், வேறு ஒருவரோடு தொடர்பில் இருப்பதாக கூறினால், என்னை உடனே விட்டு விடுவதாக அடித்து மிரட்டினர். இதனால் உயிருக்கு பயந்து ஒத்துக்கொள்வதுபோல் பேசியதை வீடியோவில் பதிவு செய்தனர்.
மேலும் எனது கணவர், அவரது தாய், தாய்மாமன் பரமசிவம் மற்றும் உறவினர் தர்மலிங்கம் ஆகியோர் சேர்ந்து ரூ.12 லட்சம், சிதம்பரத்தில் இருக்கும் வீடு மற்றும் 10 பவுன் நகையுடன் வந்தால்தான் வாழ முடியும் என்கின்றனர். இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் செய்தால் உனது வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுகின்றனர். மேலும், எனக்கு சொந்தமான 20 சவரன் நகையை பறித்துக்கொண்டதாகவும் அந்த புகாரில் சத்யா குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பேரில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுதொடர்பாக சத்யாவின் கணவர் விஜயபாண்டியனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.