உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் தமிழ்ச் சுவடியியல் (ம) பதிப்பியல் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் இதுவரை பலநூறு ஓலைச்சுவடிகள் களப்பணி வாயிலாகக் கண்டெடுக்கப்பட்டு நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.பாதுகாக்கப்பட்டு வரும் ஓலைச்சுவடிகளை அறிந்து தெரிந்து கொண்டு நூலாக்கம் செய்யும் வகையில் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப் படிப்பு உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2013-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இப்பட்டயப் படிப்பினை ஆர்வத்தோடு பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தேர்வின் அடிப்படையில் ஆண்டு தோறும் பத்து மாணவர்களுக்கு திங்கள்தோறும் ரூ.3,000/- வீதம் உதவித்தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான எழுத்துத் தேர்வு 12.04.2023 அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும்.
இப்பட்டயப் படிப்புக்கான விண்ணப்பத்தினை நிறுவன வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நேரிலும் பெற்றுக் கொள்ளலாம். இந்த படிப்புக்கான சேர்க்கைக் கட்டணம் ரூ.3,100 ஆகும். கல்வித்தகுதி குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு கிடையாது.
