ஏப்ரல் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் (WPI) அடிப்படையில் மருந்துகளின் விலை ஒவ்வொரு ஆண்டும் 10% வரை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறது இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம். அந்த வகையில் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட மருந்துகளின் விலை ஏப்ரல் மாதம் முதல் உயர்த்துவதற்கு மருந்து நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதன்படி, காய்ச்சல், தொற்றுகள், தோல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை, இதய நோய் உள்ளிட்ட 27 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் 900 அத்தியாவசிய மருந்துகளின் விலை 12% மேல் உயருகிறது. அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் 384 மருந்துகள் இடம் பெற்றுள்ளன. மற்றவை திட்டமிடப்பட்ட மருந்துகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட மருந்துகளின் விலை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.