தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு மற்றும் குளிரூட்டப்பட்ட அங்கன்வாடி திறப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டார். பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே உருமாற்றம் பெற்றுள்ள புதிய கொரோனா வைரஸ் மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இந்தியாவில் சுமார் 2400 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, கேரளா, குஜராத் போன்ற பல்வேறு மாநிலங்களில் 400 முதல் 500 அளவிலான பாதிப்புகள் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் நேற்று மட்டும் நான்காயிரம் பேருக்கு பரிசோதனை செய்ததில், 112 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். தொற்று பரவலை தடுக்கும் வண்ணம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. சமூக விழாக்களாக இருந்தாலும், அரசியல் நிகழ்வுகளாக இருந்தாலும் பெரிய அளவில் கூட்டம் கூடும்போது முக கவசம் அணிவது, தனிமனி இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி கழுவுவது போன்ற விதிமுறைகளை தொடர்ச்சியாக கடைபிடிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். மருத்துவமனைகளில் இருந்துதான் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் முகக்கவசம் அணிவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.