மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சாந்தாகுருஸ் வக்கோலாவை சேர்ந்தவர் சோபியா சேக். 17 வயதான இச்சிறுமி, தான் வசித்து வந்த அதே பகுதியை சேர்ந்த அம்பாஜி மோரே என்ற (30) வாலிபருடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இது காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் வாலிபரின் நடவடிக்கை பிடிக்காததால் அவருடன் பேசுவதை தவிர்த்திருக்கிறார் அந்த சிறுமி. இதனால், ஆத்திரமடைந்த வாலிபர், சோபியாவின் வீட்டிற்கே சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். என்னிடம் எப்போதும் போல் பழக வேண்டும்.. பேச வேண்டும் என்று அம்பாஜி சொல்ல, அதற்கு சோபியா மறுக்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த வாலிபர், தான் மறைத்து எடுத்து வந்திருந்த கத்தியை எடுத்து சோபியாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சோபியா அலறி துடித்திருக்கிறார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடு வருவதை கண்ட அந்த வாலிபர், அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால், அவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். பின்னர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதற்கிடையே, சிறுமி சோபியாவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். விசாரணையில், அந்த வாலிபர் சிறுமியை 22 முறை கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு, மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 15 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வந்ததில் அம்பாஜி மீதான குற்றம் உறுதியாக இருக்கிறது. இதையடுத்து அம்பாஜிதிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.