இந்தியா முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் பல ரயில்கள் இயங்கி வருகின்றன. இந்த ரயில்களில் பயணிக்க பலரும் முன்பதிவு செய்யும் நிலையில், விருப்பப்பட்ட பெர்த் கிடைப்பது பெரும் சிரமமாக உள்ளது. முக்கியமாக முதியவர்கள், பெண்களுக்கு மேல் பெர்த் கிடைத்தால், அவர்கள் அதில் ஏற சிரமப்படுவதால், கீழ் பெர்த்தில் உள்ளவர்களிடம் பேசி மாற்றிக்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. ஆனால், இனி யாரிடமும் சென்று லோயர் பெர்த்துக்காக கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.
ஏனென்றால், இதுகுறித்து நேற்று நாடாளுமன்றத்தில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், எழுத்துப்பூர்வ விளக்கம் அளித்துள்ளார். அதில், ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் படுக்கை வசதி பதிவு செய்தால் அவர்கள் விருப்பம் தெரிவிக்காமலே தானாக கீழ் பெர்த் புக்கிங் ஆகும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் இந்த தானியங்கி முன்பதிவு 6 முதல் 7 படுக்கை என்ற அளவிலும், மூன்றடுக்கு ஏசி பெட்டிகளில் நான்கு முதல் ஐந்து படுக்கை என்ற அளவிலும், இரண்டடுக்கு ஏசி பெட்டியில் மூன்றுக்கு நான்கு என்ற அளவில் ஒதுக்கீடு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.