கடந்த சில வாரங்களாக, இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.. இதனால் பல மாநிலங்கள் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.. குறிப்பாக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு குறித்து கோவிட் பணிக்குழு உறுப்பினரும், லான்செட் கமிஷன் உறுப்பினருமான டாக்டர் சுனீலா கார்க் பேசினார்.. அப்போது பேசிய அவர் “XBB 1.15 & XBB 1.16 ஆகியவை ஒமிக்ரானின் துணை வகைகளாகும். அவை வேகமாக பரவக்கூடியவை ஆனால் கடுமையானவை அல்ல. சில சமயங்களில், இந்த மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட ஒருவர் 3 முதல் 4 நாட்களில் குணமடையலாம்..” என்று தெரிவித்தார். தற்போது வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
தொடர்ந்து பேசிய அவர் “ தற்போது முகக்கவசம் பயன்படுத்துவது அறிவுறுத்தப்படுகிறது, ஆனால் நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தற்போது 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி தேவையில்லை.. அதை நிரூபிக்க எங்களிடம் போதுமான சர்வதேச மற்றும் தேசிய தரவு உள்ளது. 27% மக்கள் மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். தடுப்பூசி மூலம் பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி மெதுவாக குறைந்து வருவதால், அதிகமான மக்கள் பூஸ்டர் டோஸ் மூலம் தடுப்பூசி போட வேண்டும்.” என்று தெரிவித்தார்..
இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 3,038 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.. கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21,179 ஆக அதிகரித்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 5,30,901 ஆக உயர்ந்துள்ளது.