இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் அட்டை வங்கிக் கணக்கு எண், பான் கார்டு எண், ரேஷன் கார்டு, மின் கட்டணம் போன்ற பல முக்கிய ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அனைத்து அரசு மற்றும் அரசு சாரா பணிகளுக்கும் ஆதார் அட்டை அத்தியாவசியமாக மாறியுள்ளது. இந்நிலையில், இறந்தவர்களின் ஆதார் கார்டுகளை செயலிழக்க செய்ய தற்போது எந்த ஒரு நடைமுறையும் அமலில் இல்லை என தகவல் வெளிவந்துள்ளது.
இதற்கு முன்னதாக இறந்தவர்களின் ஆதார் கார்டுகளை செயலிழக்க பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் போன்றவற்றை வழங்குவதில் சில பரிந்துரைகளைக் கொண்டு வரும்படி இந்திய ஆதார் ஆணையத்திடம் இந்திய பொது பதிவாளர் தரப்பில் கேட்கப்பட்டது. அதன்படி, ஒரு நபருக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு முன்பாக இறந்த நபரின் ஆதார் அட்டையை அதிகாரிகள் பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தான் இறப்பு சான்றிதழை வழங்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வர வேண்டும் என திட்டமிட்டனர். ஆனால், இந்த விதிமுறையை முன்னெடுத்து செல்லவில்லை. மேலும் இதன் காரணமாக தற்போது வரை இறந்தவர்களின் ஆதார் கார்டுகளை செயலிழக்க செய்யவோ அல்லது அழிக்கவோ எந்த ஒரு விதிமுறையும் அமலில் இல்லை.