கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பீச்சகானஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர் (17). இவர், தனது தாய் லட்சுமம்மாவுடன் வசித்து வந்தார். இவரது தந்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மனோகர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இவர் அதேபகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், மனோகரின் காதலை பள்ளி மாணவி ஏற்கவில்லை. நீண்டகாலமாக மாணவியின் பின்னால் சென்று காதலை கூறியும் அவர் மறுத்துவிட்டார். இதற்கிடையே, கல்லூரிக்கு செல்லாமல் இருந்து வந்த மனோகர், லாரி கிளீனராக வேலைக்கு சேர்ந்தார்.
பள்ளி மாணவி காதலை ஏற்க மறுத்துவிட்ட நிலையில், ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவியை மனோகர் கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தான் 10ஆவது படிப்பதாகவும், தனக்கு 16 வயதே ஆவதாகவும், அதனால் தற்போது திருமணம் செய்து கொள்ள இயலாது என்று மாணவி திட்டவட்டமாக கூறியுள்ளார். மீண்டும் தன்னை பின்தொடர்ந்தால் பெற்றோரிடம் கூறிவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளர். இதனால் மன உளைச்சலில் இருந்த மனோகர் தான் வேலை பார்த்த லாரியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.