தமிழக அரசு மக்களுடைய நலனை கருத்தில்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஆதரவற்ற மற்றும் உணவுக்கு வழியில்லாமல் வசிக்கும் முதியவர்களுடைய துன்பத்தை போக்கும் வகையில், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டம் முதியோர் உதவி தொகை திட்டம். கணவன் அல்லது மனைவி போன்ற நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்களால் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற முதியோர் என்று கருதப்படுகின்றனர்.
இவர்களது துயரத்தை போகும் விதமாக தமிழக அரசு மாதந்தோறும் ரூ.1000 வழங்கி வந்த நிலையில், ஒரு சிலருக்கு இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் வழங்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் அறிவித்துள்ளார். மேலும், வருவாய்த்துறை சார்பில் ஏற்கனவே 25 வகையான சான்றிதழ்கள் மற்றும் சேவைகள் இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இதர சான்றிதழ்களும் இனி இணையவழியிலேயே பெறலாம். பதிவுபெற்ற சுய உதவிக் குழுக்களுக்கு குடிசைத் தொழில் செய்ய ஏதுவாக பூமிதான நிலங்கள் வீட்டுமனையாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.