நாமக்கல் மண்டலத்தில் கிடுகிடுவென கடந்த 6 நாட்களில் முட்டை விலை 30 காசுகள் விலை உயர்ந்துள்ளது. கோடையில் முட்டை உற்பத்தி குறைவு, மீன்பிடி தடை அமலில் உள்ள நிலையில் தேவை ஏற்பட்டதால் விலை உயர்வு என பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில் 7 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு தினசரி 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 4 ரூபாய் 30 காசுகளில் இருந்து 5 காசுகள் விலை உயர்த்தி 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
கடந்த 2ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 5 காசுகளிருந்து 5 காசுகளும், 3ஆம் தேதி 5 காசுகளும், 4ஆம் தேதி 10 காசுகளும், 6ஆம் தேதி 5 காசுகளும் விலை உயர்த்தி ரூ.4.30-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றும் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் விலை உயர்த்தி ரூ.4.35-விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தினம், தினம் முட்டை விலை உயர்ந்து கடந்த 6 நாட்களில் 30 காசுகள் வரை விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து முட்டை பண்ணையாளர்கள் கூறுகையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயம் செய்யும் விலைக்கே முட்டைகள் பண்ணைகளில் விற்கப்படுவதால் விலை குறைவாக உள்ளதாகவும், அதே சமயம் கோடை வெப்பத்தால் முட்டை உற்பத்தியும் சற்று குறைந்த நிலையில். தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் முட்டை விற்பனை அதிகரித்து தேவை ஏற்பட்டதால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த விலை மேலும் உயர வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தனர்.