ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து செயல்பட உள்ளதாகக் கூட்டாக அறிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், டிடிவி தினகரனை நேரில் சந்தித்தார். ஓபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனும் உடன் இருந்தார். டிடிவி தினகரனை தொடர்ந்து சசிகலாவையும் ஓபிஎஸ் சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. அடையாறில் உள்ள இல்லத்தில் டிடிவி தினகரன் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், “ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இத்தனை காலம் தனித்தனியாகச் செயல்பட்டனர். இப்போது அதே லட்சியத்தை அடைய இருவரும் கூட்டாகச் செயல்பட உள்ளனர். இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எப்படி ஒரு working arrangement வைத்துச் செயல்படுகிறார்களோ.. அதேபோல இனிமேல் இருவரும் செயல்படுவார்கள்” என்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ”எப்போது சசிகலா மற்றும் டிடிவி தினகரனை சந்திக்க உள்ளீர்கள் என்றே இதுவரை பலரும் என்னிடம் கேட்டார்கள். இந்தச் சூழலில் டிடிவி தினகரனை சந்தித்துள்ளேன். சசிகலாவைச் சந்திப்பது குறித்தும் கேட்டிருந்தோம். அவர் வெளியூரில் இருப்பதால் வந்தவுடன் சந்திக்கலாம் என்று கூறியுள்ளார். வந்தவுடன் நிச்சயம் சந்திப்போம்” என்றார்.
பின்னர், டிடிவி தினகரன் பேசுகையில், சிபிஐ, சிபிஎம் கட்சிகள் போல நானும் ஓபிஎஸ்சும் இணைந்து செயல்படுவோம். எனக்கும் அவருக்கும் சுயநலம் கிடையது. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் கையில் இந்த இயக்கம் இருக்க வேண்டும். அதை கபளீகரம் செய்து பணபலம் ஆணவத்தோடு செயல்படுவர்களிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுத்து தீயசக்தி திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் இந்த இயக்கத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் நானும் ஓபிஸ்சும் இணைந்து இருக்கிறோம்” என்றார். இந்த சந்திப்பு வரும் காலங்களில் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தச் சந்திப்பிற்கு அதிமுக வட்டாரங்கள் என்ன சொல்லப் போகிறது என்பது குறித்தும் பெரும் எதிர்பார்ப்பே நிலவி வருகிறது.