பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் ஆடியோ-வீடியோ கால் வசதிகள் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் முக்கிய இடம் வகிப்பது ட்விட்டர். ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியது முதல், எலான் மஸ்க் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார். ட்விட்டர் நிறுவனத்தில் வருவாயை பெருக்கும் வகையில் பல்வேறு கெடுபிடிகளை விதித்து வரும் மஸ்க் , குறிப்பாக ப்ளூ டிக் பெற கட்டணம், ப்ளூ டிக் சேவையை தொடர்ந்து பெற மாதாந்திர கட்டணம், விளம்பரமின்றி பார்க்க கட்டணம் என எடுத்ததற்கெல்லாம் கட்டணம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 20-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் (Verified Users) அகற்றப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி ஏப்ரல் 20ம் தேதி வரை கட்டணம் செலுத்தாத பலரின் ப்ளூ டிக்குகள் நீக்கப்பட்டன.
அந்தவகையில் பிரபலங்கள் ரஜினிகாந்த், விஜய், மோகன்லால், மம்மூட்டி, ராம்சரண், சிம்பு, திரிஷா, தோனி, விராட்கோலி, ரோஹித் ஷர்மா உள்ளிட்ட பலரது ப்ளூ டிக்குகள் நீக்கப்பட்டன. இந்த நிலையில், வாட்ஸ் அப், பேஸ்புக்கில் இருப்பது போன்று ட்விட்டரிலும் ஆடியோ, வீடியோ கால் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதிலும், செல்போன் நம்பர் இல்லாமலேயே ஆடியோ, வீடியோ காலில் பேசும் வசதியை அந்நிறுவனம் கொண்டு வர இருக்கிறது. சோதனை அடிப்படையில் ட்விட்டர் செயலியில் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்திருக்கிறார்.