டெல்லி அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி வீரர்கள் யாரும் 25 ரன்களுக்கு மேல் அடிக்காத நிலையிலும் அந்த அணி வெற்றி பெற்று வித்தியாசமான சாதனை படைத்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 55வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் – கான்வே ஜோடி சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். பின்னர் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் அதிகளவில் ரன்கள் அடிக்காமல் அவுட்டாகினர். சென்னை அணி 20 ஓவர்களில் 167/8 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக துபே(25), ருதுராஜ்(24), ராயுடு(23), ரஹானே(21), ஜடேஜா (21), மற்றும் தோனி(20)ரன்கள் என அணியில் எந்தவொரு வீரரும் 25 ரன்களை தாண்டவில்லை.
பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி கேப்டன் வார்னர் தீபக் சஹரின் மிரட்டல் பந்துவீச்சில் முதல் ஓவரின் 2வது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் சென்னை பவுளர்களின் அபாரமான பந்திவீச்சை சமாளிக்க முடியாமல் அவுட்டாகினர். அதன்படி, டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதனால், இந்த போட்டியில் சிஎஸ்கே அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும், இந்த போட்டியில் சென்னை அணி ஒரு வித்தியாசமான சாதனையை படைத்துள்ளது. அதாவது சென்னை அணியில் எந்த வீரரும் 25 ரன்களைக் கூட தாண்டவில்லை, ஆனாலும் சிஎஸ்கே வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதுபோன்று ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியில் எந்தவீரரும் 25 ரன்களுக்கு மேல் குவிக்காமல் அணி வெற்றி பெறுவது இதுவே முதல்முறை.