மத்திய அரசின் தென்மண்டலப் பணியாளர் தேர்வாணையம் (SSC), ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) அளவிலான தேர்வு 2023 (நிலை-1) ஆகஸ்ட் மாதம் கணினி அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. மத்திய அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்ற பல்வேறு அரசு சார்ந்த நிறுவனங்களில் கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர், டிஇபி (டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்) போன்ற பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்களின் வயது, கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு அட்டவணை எவ்விதம் விண்ணப்பிக்க வேண்டும் போன்ற தகவல்கள் இந்த தேர்வாணையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ssc.nic.in என்று இணையத்தளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 08.06.2023 ஆகும். ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி தேதி 10.06.2023 ஆகும். ஆன்லைன் விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் அனுப்பும் புகைப்படத்தில் தொப்பியோ, கண்ணாடியே அணிந்திருக்கக்கூடாது. அவர்கள் புகைப்படம் தெளிவாக இருக்க வேண்டும்.தென்னக பகுதிகளில் கணினி மூலம் நடைபெறும் இந்த தேர்வு 22 மையங்களில் ஆகஸ்ட் – 2023-லில் நடைபெறுகிறது. ஆந்திரா மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 8 மையத்திலும், தெலங்கானாவில் 3 மையங்களிலும் நடைபெறவுள்ளது.