fbpx

அறவழியில் போராடிய எளிய மக்கள் படுகொலை..! 5ஆம் ஆண்டு நினைவு தினம்… எம்பி கனிமொழி உருக்கம்…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 22) கடைபிடிக்கப்படுகிறது.2018 பிப்ரவரி 5 ஆம் தேதி, தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் 2018, மே 22 ஆம் தேதி 100-வது நாளை எட்டியதையடுத்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க பேரணியாக வந்தவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பேரணியில் வந்த 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உள்ப்பட 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதனைதொடர்ந்துஸ்டெர்லைட் ஆலை மாவட்ட நிர்வாகம் சார்பில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அதே ஆண்டில் ஆணையம் அமைக்கப்பட்டது. பல்வேறு கட்ட விசாரணைக்குப்பிறகு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கை நான்கு பகுதிகளாக கடந்தாண்டு அக்டோபரில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல் துறையினர் வரம்பு மீறியும், அத்து மீறியும் செயல்பட்டு இருக்கிறார்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தது. மேலும், துப்பாக்கி சூடு விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர், 17 காவல் துறையினர் உட்பட 21 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் பரிந்துரைத்திருந்தது.

மேலும் அப்போதைய முதல்வர் பழனிசாமி துப்பாக்கிச் சூட்டை ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று தெரிவித்தார். ஆனால், அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், உளவுத் துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடி நிலவரங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் முதல்வருக்கு நிமிடத்துக்கு நிமிடம் தெரிவித்தனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று அவர் கூறியது தவறானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் “சமூக விரோதிகளால்தான் கலவரம் உண்டானது என்று, கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என ரஜினி கூறினார். ரஜினிகாந்த் போன்ற பிரபலம் ஒரு கருத்தைத் தெரிவிக்கும்போது அவர் கூறும் தகவலின் ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும். பிரபலங்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் துப்பாக்கி சூட்டில் நேரடியாக ஈடுபட்டதாக அப்போதைய காவல் ஆய்வாளர் திருமலை, முதல்நிலை காவலர் சுடலைக்கண்ணு உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தமிழக வரலாற்றில் ஆறாத வடுவாக மாறிய இந்த துயரச் சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இது குறித்து திமுக துணை பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி ட்விட்டரில் “தங்கள் வாழ்வுரிமைக்காக அறவழியில் போராடிய எளிய மக்கள் படுகொலை செய்யப்பட்ட நாள் இது. இம்மண்ணையும் மக்களையும் காத்திட, களம் கண்டு உயிர் நீத்த போராளிகளுக்கு எம் வீரவணக்கம்! அவர்களின் வீரம் செறிந்த போராட்டமும், ஒப்பற்ற தியாகங்களும் அநீதிக்கு எதிரான குரலாக வரலாற்றில் ஒலித்துக் கொண்டே இருக்கும். மக்கள் நலனையும் சூழலியல் பாதுகாப்பையும் முதன்மையாகக் கொண்டு பணியாற்றிட இந்நாளில் உறுதியேற்போம்” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டின் 5-ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வில், போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட 13 போராளிகளின் திருவுருவப் படங்களுக்கு கனிமொழி கருணாநிதி மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

Kathir

Next Post

சூதாட்டத்தில் தோற்றதால் தனது மனைவியை நண்பனுடன் அனுப்பி வைத்த கணவன்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

Mon May 22 , 2023
போதைக்கு அடிமையான கணவன் தனது மனைவியை சூதாட்டத்தில் பணயம் வைத்து இழந்த பகீர் சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே அகமதுநகர் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கணவன் மீது அதிர்ச்சி தரும் புகார் ஒன்றை தந்துள்ளார். அவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகியுள்ளது. கணவன் மதுபோதைக்கு அடிமையானதோடு, தினமும் சூதாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், இவரது கணவன் சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல […]

You May Like