கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்காக மகிழ்ச்சியில் இருக்கிறது. ஆனால் அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று ராகுல் காந்தியின் பாரத் ஜூடோ நடைபயணம் தான். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டு அறிந்தார் ராகுல் காந்தி.
அதேபோல தலைநகர் டெல்லியில் உள்ள சந்தை பகுதிகளுக்கு சென்று பொதுமக்களோடு ஒன்றிணைந்து சாலையோர உணவு சாப்பிட்டது, டெல்லி பல்கலைக்கழக விடுதியில் மாணவர்களுடன் ஒன்றிணைந்து உரையாடியது என்று சமீபகாலமாக அவ்வப்போது பல்வேறு தரப்பு மக்களையும் ராகுல் காந்தி நேரில் சந்தித்து பேசுகின்றார்.
அந்த வகையில் நேற்று இரவு டெல்லியில் இருந்து சிம்லாவுக்கு காரில் பயணித்த ராகுல் காந்தி திடீரென்று டெல்லி சதீஷ்கர் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி சாலையோர உணவகங்களில் நின்றிருந்த லாரி ஓட்டுனர்களுடன் உரையாடினார்.
அதன் பிறகு யாரும் எதிர்பாராத விதத்தில், தன்னுடைய கார் பயணத்தை தவிர்த்து முர்தலிலிருந்து அம்பலா வரையில் லாரி முன்பகுதியில் லாரி ஓட்டுனருடன் அமர்ந்து பயணித்தார்.
இந்த பயணத்தின் போது லாரி ஓட்டுனர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர்களுடைய வாழ்வாதாரம் தொடர்பாக வெகு நேரம் உரையாடி இருக்கிறார். இதனை தொடர்ந்து, அம்பலாவில் இருந்து கார் மூலமாக சிம்லாவுக்கு புறப்பட்டுச் சென்றதாக காங்கிரஸ் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றன