தமிழ்நாட்டில் இன்று பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒன்றரை மாதமாக இந்தியாவில் பல மாநிலங்களிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும் கோடை வெயில் உச்சத்தை தொட்டது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வந்தது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.
நேற்று கூட தமிழ்நாட்டில் மிக மோசமான வானிலை நிலவியது. சென்னை, வேலூர், காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, நாமக்கல், திருவாரூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் நேற்று கடுமையான வெயில் நிலவியது. 40 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையை தாண்டி நேற்று வெயில் நிலவியது. தமிழ்நாட்டில் நேற்று வெயில் தீவிரமாக இருந்த நிலையில், இன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்யும். வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில் படிப்படியாக வெப்பநிலை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் நிலவி வந்த வெப்ப அலை முடிவிற்கு வந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றோடு வெப்ப அலை முடிவிற்கு வந்ததாக வானிலை மையம் கூறியுள்ளது. இனி வெப்பம் படிப்படியாக குறையும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் அடுத்த 2-3 நாட்களுக்கு மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் சண்டிகர் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் மலைப் பகுதிகளில் அடுத்த 2-3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கிழக்கு இந்தியாவிலும் புயல்கள் தாக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும். எப்போதும் ஜூன் முதல்வாரம் தொடங்கும் இந்த மழை இந்த முறை மே இறுதியில் தொடங்க உள்ளது. இந்தியாவில் தென் மேற்கு பருவமழை இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.