14 வயது மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வாலிபர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க நீலகிரி ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே பகல்கோடு பகுதியில் வசித்து வருபவர் குட்டன். இவர், தோடர் பழங்குடியினத்தை சார்ந்தவர். இவரது 14 வயது மகள் உதகை அருகே உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் ஒரு மாதத்திற்கு முன்பு வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற நிலையில், மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல HPF பகுதியில் பேருந்துகாக காத்திருந்தார். அப்போது காரில் வந்த அவரது உறவினர் ரஜ்னேஷ் குட்டன் (25) வீட்டில் விடுவதாக கூறி மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். அவரை நம்பி மாணவி காரில் ஏறிய நிலையில், கூடலூர் அடுத்துள்ள பைக்காரா சாலையில் உள்ள அங்கர் போர்ட் வன பகுதியில் வைத்து ரஜ்னேஷ் குட்டன் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவரை கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.
அவர் மீது பைக்கார போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், 3 தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு காலை நஞ்சநாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் ரஜ்னேஷ் குட்டன் பைக்காரா காவல் நிலையத்தில் சரணடைந்தார். இநிலையில் அவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சூழ்நிலையில், கூடலூர் அனைத்து மகளிர் தொடர்ந்து விசாரணை நடத்திவந்தனர்.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன், ரஜ்னேஷ் குட்டன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரை பேரில், மாவட்ட ஆட்சியர் அம்ரித் குண்டர் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் அடிப்படையில் அந்த குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.