புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கட்டுமான பணியில் ஈடுபட்டவர்களும் பங்கேற்றுக் கொண்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே செங்கோல் நிறுவப்பட்ட பின்னர் அனைத்து மத வழிபாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து கட்டுமான தொழிலாளர்களை பிரதமர் நரேந்திர மோடி கௌரவித்தார்.
இந்த புதிய நாடாளுமன்ற கட்டிட சிறப்பு விழா சர்வ மத பிரார்த்தனைகளுடன் இன்று காலை ஆரம்பமானது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சி இன்று காலை 12 மணி அளவில் நடைபெற உள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக பாரம்பரிய சடங்குகள் அதிகாலையிலேயே தொடங்கியது.
வேத மந்திரங்கள் முழங்க தமிழக ஆதீனங்கள் ஓதுவார்கள் நடத்தும் சிறப்பு வழிபாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டார். அவருடன் மக்களவை தலைவர் ஓம் பிர்லாவும் பங்கேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைக்கு பின்னர் ஆதீனங்களிடமிருந்து செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் பூஜைக்குப் பிறகு செங்கோல் முன்பு பிரதமர் நரேந்திர மோடி மண்டியிட்டு செங்கோலை வணங்கினார். பிறகு செங்கோலை ஏந்தியபடி ஆதீனங்களிடம் தனித்தனியாக ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி.
அதன் பிறகு நாடாளுமன்றத்தில் மக்களவைத் தலைவர் இருக்கை அருகே செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி நிறுவினார். செங்கோலை செங்குத்தாக நிலை நிறுத்தி குத்து விளக்கையும் ஏற்றி வைத்தார் நரேந்திர மோடி.
அப்போது வந்தே மாதரம் பாடல் நாதஸ்வரத்தில் இசைக்கப்பட்டது மேலும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கான கல்வெட்டை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அவருடன் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இருந்தார். நாடாளுமன்ற கட்டிடப் பணியில் ஈடுபட்ட அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் பொன்னாடை போர்த்தி பிரதமர் கவுரவித்தார்.