பீகாரில் பெண் ஒருவருக்கு தெரியாமல் அவருடைய சிறுநீரகம் மருத்துவர்களால் திருடப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரைச் சேர்ந்தவர் சுனிதா தேவி. இவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், சில நாட்களாக வயிற்றுவலி ஏற்படுள்ளது. எனவே அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்று உள்ளார். அங்கு இவரை பரிசோதித்த டாக்டர், அவருக்கு கர்ப்பப்பை கோளாறு இருப்பதாகவும், உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமெனவும் கூறியுள்ளார். இதனால் அவருக்கு 3 செப்டம்பர் 2022 அன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் இவரது உடல்நிலை மேலும் மோசமாக காணப்பட்டதால், வேறொரு மருத்துவமனையை அணுகியுள்ளார். அங்கே இவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது இரண்டு கிட்னிகளும் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.
கிட்னிகள் திருடப்பட்டதை தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட சுனிதா தற்போது முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே கிட்னி திருடப்பட்ட விவகாரம் குறித்து காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் ஜிதேந்திர குமார் பாஸ்வான், ஆர்.கே.சிங் மற்றும் பவன் குமார் ஆகியோர் மீது சுனிதா புகார் அளித்தார். இந்த விவகாரம் பெரிதானதையடுத்து அவர்கள் தலைமறைவாகினர். பின்னர் போலீசில் சிக்கிய அவர்கள் தற்போது சிறையில் உள்ளனர். தன்னுடைய கிட்னி திருடிய மருத்துவரின் கிட்னியை எடுத்து தனக்கு பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் சுனிதா வைத்துள்ளார்.
மிகவும் மோசமான நிலையில் இருக்கும் அந்த பெண் தற்போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் காலம்தள்ளி வருகிறார். சிறுநீரகம் தானமாக பெற பதிவு செய்துள்ள சுனிதா, 8 மாதங்களாக காத்திருக்கிறார். தற்போது வாரமொருமுறை செய்யப்படும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சையால் உயிர் பிழைத்த அவர், மாற்று சிறுநீரகம் பொருத்தினால் மட்டுமே உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளார்.
சுனிதா தேவிக்கு தேவையான டயாலிசிஸ் மற்றும் இதர மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவுகளை மாநில அரசு கவனித்துக் கொள்கிறது. மேலும் சுனிதாவின் 3 பிள்ளைகளுக்கான கல்விச் செலவையும் அரசு ஏற்றுள்ளது. இதனிடையே எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், சுனிதாவுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க முன்வந்தது மாவட்ட நிர்வாகம். ஆனால் ரூ.25 லட்சம் இழப்பீடு மற்றும் கணவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற தனது கோரிக்கை பரீசிலிக்கப்படாததால் ரூ.5 லட்சம் இழப்பீட்டை பெற மறுத்து விட்டார் சுனிதா.
2011-ல் பீகார் மாநிலத்தில் அரங்கேறிய கர்ப்பப்பை திருட்டு சம்பவத்தை அத்தனை எளிதில் மறக்க முடியாது. சமஸ்திபூர், கோபால்கஞ்ச், சரண் உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வந்த சுமார் 700 பெண்களின் கர்ப்பப்பை மருத்துவர்களால் திருடப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அச்சம்பவம் நிகழ்ந்து 10 ஆண்டுகளைக் கடந்துவிட்டாலும் பீகாரின் மருத்துவத்துறையில் அரங்கேறும் மோசடி குறித்த செய்திகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.