ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் பாலசோர் அருகே கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு அடுத்தடுத்து 2 ரயில்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 300 பேர் பலியானதாக கூறப்படும் நிலையில், 900-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கூட பலியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டு தண்டவாளத்தை சரி செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மறுபக்கம் இந்த விபத்து குறித்த சில முக்கிய தகவல்களை சேகரித்து நெட்டிசன்கள் ட்விட்டரில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அப்படி நெட்டிசன்கள் பதிவிட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரல் ஆகி வருகிறது.
அதன்படி, இந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு ரிலீஸ் ஆன கமலின் ’அன்பே சிவம்’ படத்தில் காட்சிப்படுத்தி இருந்தது தான் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அந்த படத்திலும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தான் தடம்புரண்டு கோர விபத்தில் சிக்குவது போன்று காட்சிப்படுத்தி இருப்பார்கள். அந்த சம்பவம் தற்போது நிஜத்தில் நடந்து இருப்பதால் இரண்டையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
அதேபோல் தற்போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியதில் ஏராளமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு அதிகளவில் ரத்தம் தேவைப்பட்டதால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பலர் மருத்துவமனைக்கு படையெடுத்து வந்த இரத்த தானம் செய்தனர். இந்த சம்பவமும், அன்பே சிவம் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.